தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவரது மனைவி பாப்பா (65). கடந்த 1-ஆம் தேதி அன்று இவர், மறவன்மடம் அருகே உள்ள சர்ச்சுக்குப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் மெயின் கேட் மற்றும் உள்பகுதி கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த செயின், கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 3 பவுன் நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

இச்சம்பவம் குறித்து பாப்பா தட்டாம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ. ஜெயலதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், வீட்டின் கதவை உடைத்துத் துணிகரமாக நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.