விளாத்திகுளத்தில் உள்ள பழைய இரும்பு குடோனில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தியதால் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் துரைப்பாண்டி (40). இவர் விளாத்திகுளம் - எட்டையாபுரம் சாலையில் பழைய இரும்பு கடை மற்றும் குடோன் நடத்தி வருகிறார்.

இன்று (நவம்பர் 4) அதிகாலை சுமார் 3.30 மணி அளவில், இவரது குடோனில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவெனப் பரவி, அங்கிருந்த பழைய இரும்புப் பொருட்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான வீரர்களும், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையிலான வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், சுமார் இரண்டரை மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட குடோனில் இருந்து வெறும் 10 மீட்டர் தொலைவிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும், தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையமும் அமைந்துள்ளன. தீ மேலும் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, அருகிலிருந்த கட்டிடங்கள், தகரக் கூரைகள் மற்றும் மரங்களின் மீது தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இதனால் பெட்ரோல் பங்கிற்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. அதிகாலை நேரத்தில் பெட்ரோல் பங்க் அருகே நிகழ்ந்த இத்தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.