கோவில்பட்டியில் கிரிக்கெட் விளையாடி விட்டுத் திரும்பியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் செல்லசாமி (22), தொழிலாளி. இவர் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் நின்று கொண்டிருந்த சுப்பிரமணியபுரம் 1-ஆவது தெருவைச் சேர்ந்த முகிலன் மூர்த்தி என்ற கோபி (26) என்பவரிடம் சற்று விலகி நிற்கும்படி செல்லசாமி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது. பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, முகிலன் மூர்த்தி செல்போனில் தொடர்பு கொண்டு, தகராறு குறித்துப் பேச வேண்டும் எனக் கூறி சுப்பிரமணியபுரம் காளியம்மன் கோவில் பின்புற பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அங்குச் சென்ற செல்லசாமியை, முகிலன் மூர்த்தி உட்பட 6 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த செல்லசாமி உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துச் செல்லசாமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் தொடர்புடைய முகிலன் மூர்த்தி என்ற கோபி (26), தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சேர்ந்த தேசிங்கு ராஜ் (23) பாரதி நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்த மாதவன் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இத்தாக்குதலில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

