தூத்துக்குடியில் தொழில் போட்டி காரணமாக பா.ஜ.க பிரமுகரான லாரி செட் உரிமையாளரின் வீட்டை அடித்துச் சூறையாடி, காரைச் சேதப்படுத்திய 8 பேர் கொண்ட கும்பலைச் சிப்காட் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்தவர் சிவா (36). பா.ஜ.க பிரமுகரான இவர் சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் மற்றும் சிலர் இணைந்து ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள காப்பர் கழிவு மணலை வெளிமாநிலங்களில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், தொழில் போட்டி காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் சிவாவின் வீட்டிற்குச் சென்றுள்ளது. அங்கிருந்த சிவாவுக்குச் சொந்தமான கார் மற்றும் வீட்டின் ஜன்னல்கள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்துச் சேதப்படுத்திவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

சிவா அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வெள்ளத்துரை உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.