தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு 9:40 மணிக்குக் கேரள மாநிலம் பாலக்காடு நோக்கிப் புறப்பட்டுச் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரம் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி மீது ரயில் மோதியது. இக்கோர விபத்தில் பலத்த காயமடைந்த புலி பரிதாபமாகத் தன் உயிரை இழந்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் செங்கோட்டை வனத்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த புலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி புலி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.