கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று இரவு அம்மனுக்கு சுவாமி பூவனநாதராகக் காட்சியளிக்கும் வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை பலகையிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் கடந்த 2-ஆம் தேதியும், தீர்த்தவாரி 3-ஆம் தேதியும் நடைபெற்றன. திருவிழாவின் 11-ஆம் நாளான நேற்று பகல் 1 மணிக்கு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளத்தில் உள்ள காட்சி மண்டபத்தில் தபசுக்கு எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 8 மணிக்கு சுவாமி பூவனநாதர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தபசிலிருந்த செண்பகவல்லி அம்மனுக்குக் காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று திருக்கல்யாணம்:
திருவிழாவின் சிகர நிகழ்வாக இன்று (வியாழக்கிழமை) இரவு சுவாமி - அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) ந. காந்திமதி, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

