ஆறுமுகநேரி அருகே பள்ளி மைதானத்தில் சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பேயன்விளையில் உள்ள பள்ளி மைதானத்தில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள், ரோந்து வந்த காவல் துறையினரைக் கண்டதும் திடீரெனத் தப்பியோட முயன்றனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களை உடனடியாக விரட்டிப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவைச் சேர்ந்த முஸ்தாக் மகன் தாஹிர் அதில் (20) மற்றும் அதே பகுதி ஜமால் ஹாஜித் மகன் ஜாசிம் இம்ரான் (19) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் விற்பனைக்காகக் கஞ்சா மற்றும் ஜிப்லாக் கவர்களை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து தலா 50 கிராம் வீதம் மொத்தம் 100 கிராம் கஞ்சா மற்றும் 40 ஜிப்லாக் கவர்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆறுமுகநேரி போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் பேரூரணி சிறையில் அடைத்தனர்.

