தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், பாத்திமா நகர் 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அச்சோதனையில் வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 500 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாகப் பாத்திமா நகரைச் சேர்ந்த தொம்மை மகன் லிவிங்ஸ்டன் எலையாஸ் வெலிங்டன் (36) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சோதனை செய்ய வரும்போதே அவர் தப்பியோடிவிட்டதால், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள வெலிங்டன் மீது தூத்துக்குடி தெற்கு, வடக்கு மற்றும் தருவைகுளம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இவர் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டல்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து பின்னர் நள்ளிரவில் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று அங்கே மீனவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. நேற்று இரவு ஒரே நேரத்தில் 500 மது பாட்டில்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

