தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே பேயன்விளை கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கந்தப்பழம். இவரது மகன் சுரேஷ்குமார் (52). இவருக்கும் இவரது மனைவி செல்லம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்லம்மாள், தனது 3 மகள்களையும் அழைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் சென்று தூங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார், நேற்று இரவு தனது வீட்டின் சமையலறையில் கயிறால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

