தெற்கு தமிழ்நாட்டில் மின்சார ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், திருநெல்வேலி (மேலப்பாளையம்) பகுதியில் MEMU ரயில் பராமரிப்புப் பணிமனை (MEMU Maintenance Shed) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு வரும் ரயில்வே பட்ஜெட்டில் வெளியாகுமா எனத் தென் மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சுமார் 1,355 கி.மீ. ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது. கன்னியாகுமரி – சென்னை பிரதான வழித்தடத்திலிருந்து பிரிந்து செல்லும் பல்வேறு கிளை வழித்தடங்களும் இக்கோட்டத்தில் உள்ளன. குறிப்பாக திருநெல்வேலி – திருச்செந்தூர், திருநெல்வேலி – செங்கோட்டை, விருதுநகர் – செங்கோட்டை, விருதுநகர் – மானாமதுரை, மதுரை – ராமேஸ்வரம், மதுரை – போடி, திண்டுக்கல் – பொள்ளாச்சி உள்ளிட்ட வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், இவ்வளவு விரிவான ரயில் கட்டமைப்பைக் கொண்ட மதுரை கோட்டத்தில் பெரிய அளவிலான ரயில் பராமரிப்புக் கட்டமைப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை என்பது பயணிகளின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

2014-ல் மின்மயமாக்கல் நிறைவு; இதுவரை MEMU இல்லை!

நாகர்கோவில் – திருநெல்வேலி – மதுரை வழித்தடத்தில் 2014ஆம் ஆண்டிலேயே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்தன. தொடர்ந்து திருநெல்வேலி – செங்கோட்டை, திருநெல்வேலி – திருச்செந்தூர், மதுரை – ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து, மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தெற்கு தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை கோட்டத்தின் தமிழ்நாடு பகுதிகளில் இதுவரை ஒரு MEMU ரயில்கூட அறிமுகப்படுத்தப்படவில்லை.

மறுபுறம், கேரளாவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே MEMU ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டு, கொல்லம் மற்றும் பாலக்காடு பராமரிப்புப் பணிமனைகள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தெற்கு தமிழ்நாட்டின் மின்சார ரயில் சேவைத் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகப் பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

தற்போது கேரளாவில் உள்ள MEMU பராமரிப்புப் பணிமனைகளைப் பயன்படுத்தி மதுரை கோட்டத்தின் தமிழ்நாட்டுப் பகுதிகளில் புதிய MEMU சேவைகளைத் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருச்சிராப்பள்ளியில் புதிய MEMU பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி பணிகள் முடியும் நிலையில் உள்ளது, தெற்கு தமிழ்நாட்டிற்கும் இதேபோன்ற வசதி அவசியமாகிறது.

MEMU ரயில்களால் பயணிகளுக்கும் ரயில்வேக்கும் பலன்கள்!

தற்போது திருநெல்வேலி – திருச்செந்தூர், திருநெல்வேலி – செங்கோட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் சில பயணிகள் ரயில்களில், திருநெல்வேலி சந்திப்பில் இன்ஜினைக் கழற்றி மறுமுனையில் பொருத்த வேண்டியுள்ளது. இதற்காக நடைமேடைகளும் ரயில் இயக்க நேரமும் பயன்படுத்தப்படுகின்றன.

MEMU ரயில்களில் இருபுறமும் இயக்கும் வசதி இருப்பதால், இன்ஜினை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் ரயில் இயக்க நேரத்தைக் குறைப்பதுடன், நடைமேடைப் பயன்பாட்டையும் மேம்படுத்த முடியும். மேலும், பழைய ICF பெட்டிகளுக்குப் பதிலாக நவீன MEMU ரயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தினசரி பயணிகள், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் பயனடைவார்கள்.

மேலப்பாளையத்தில் இடவசதி – இரண்டு ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை!

திருநெல்வேலியை அடுத்த மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி டவுன் ரயில் நிலையங்களில் MEMU பராமரிப்புப் பணிமனை அமைப்பதற்கான இடவசதிகளைத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால்,ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இதற்கான திட்ட அறிவிப்போ, செயல்படுத்துவதற்கான நடவடிக்கையோ இதுவரை வெளியாகவில்லை. குறிப்பாக, மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் ஏற்கனவே உள்ள கட்டிட வசதிகளைப் பயன்படுத்தி MEMU பராமரிப்புப் பணிமனை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யலாம். இதன் மூலம் புதிய கட்டமைப்புச் செலவுகளைக் குறைத்து, திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த முடியும்.

திருநெல்வேலி எம்.பி. கோரிக்கைக்கும் சாதகமான பதில் இல்லை!

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திருநெல்வேலியில் MEMU பராமரிப்புப் பணிமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த தெற்கு ரயில்வே நிர்வாகம், திருநெல்வேலியில் MEMU பராமரிப்புப் பணிமனை அமைக்கும் திட்டம் தற்போது இல்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தென்மாவட்ட மதுரை கோட்டம் ரயில்வே துறை வளர்ச்சியில் மிகவும் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு மிக மிக முக்கிய காரணம் மதுரை கோட்டம் ஆகும். மதுரை கோட்ட அதிகாரிகள் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் தெற்கு ரயில்வே தலைமையகம் மற்றும் ரயில்வே வாரியத்துக்கு திட்ட கருத்துரு அனுப்புவது கிடையாது. இருக்கிறதை வைத்து ஓட்டிவிட்டு சீட்டை தேய்த்துவிட்டு சம்பளம் வாங்கிவிட்டு சென்றால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளார்கள்.

மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தினசரி ரயில்களை பார்த்தால் ஓரளவுக்கு அனைத்தும் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் ரயில்கள் ஆகும். புதிதாக எந்த ஒரு தினசரி ரயில் இயக்க மதுரை கோட்டம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஒரு சில வட இந்திய அதிகாரிகள் வந்தாலும் அவர்களை பணிசெய்ய விடுவது கிடையாது. இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் புலனாகின்றது மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே மண்டலங்களில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் அங்கு பணிபுரியும் அனைவரும் வடஇந்தியாவில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே தென்மாவட்டங்கள் ரயில்வே துறையில் வளர்ச்சி பெறும். அல்லது மதுரை கோட்டத்தை மொத்தமாக ஒழித்துவிட்டு தற்போது மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள பகுதிகளை அருகில் உள்ள திருச்சி, சேலம், திருவனந்தபுரம் கோட்டங்களுக்கு பிரித்து கொடுத்து விட வேண்டும்.

தெற்கு தமிழ்நாட்டில் ஏராளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் இருந்தும், ஒரு MEMU ரயில்கூட இயக்கப்படாத நிலை தொடர்வது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தெற்கு தமிழ்நாட்டின் ரயில்வே வளர்ச்சிக்கும், ஆயிரக்கணக்கான தினசரிப் பயணிகளின் நலனுக்கும் முக்கியத்துவம் அளித்து, திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி (மேலப்பாளையம்) பகுதியில் MEMU ரயில் பராமரிப்புப் பணிமனை அமைப்பதற்கான அறிவிப்பை வரும் ரயில்வே பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி – செங்கோட்டை, திருநெல்வேலி – திருச்செந்தூர், மதுரை – ராமேஸ்வரம் உள்ளிட்ட வழித்தடங்களில் நவீன MEMU ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தென் மாவட்ட ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.