திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், கால்நடை சந்தை அருகே உள்ள நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் ஆய்வு மேற்கொண்டு, சமூக நாய்களுக்கான (Stray Dogs) கருத்தடை நடவடிக்கைகள் மற்றும், வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தி ருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நாய்களுக்கான வெறி நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கருத்தடை சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியின் நாய்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 3,500 தெருநாய்கள் மாநகராட்சி பகுதிகளில் உள்ளன. அவற்றில் 3,180 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களை அடையாளப்படுத்த அவற்றின் மீது மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் பச்சை நிற வர்ணம் பூசப்பட்டிருக்கும். இதன் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களை எளிதில் அடையாளம் காணலாம். இன்று ஒருநாள் மட்டும் 25 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாதம் ஒன்றிற்கு சராசரியாக 150 முதல் 200 வரை நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் இதுவரை 867 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இம்மையத்தில் கூடுதலாக ஒரு ஆபரேஷன் தியேட்டர் மற்றும் நாய்கள் பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாலைகளில் சுற்றித் திரியும் சமூக நாய்களுக்கு பொதுமக்கள், தனிநபர்கள் உணவு வழங்குவதற்கு குறிப்பிட்ட இடங்கள் வரையறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சில தனிநபர்கள் தங்கள் வளர்க்கும் நாய்கள் நோயால் பாதிக்கப்படும் போது அல்லது அவை வயது முதிர்வு அடையும் போது பராமரிப்பின்றி அவற்றை தெருவில் விடுகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும்.
ஏதேனும் பகுதியில் நாய்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். குறிப்பிட்டு நாய்களை உடனடியாக மீட்டு தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை சிகிச்சை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) திருநாவுக்கரசு, மாநகராட்சி உதவி ஆணையர் சந்திரமோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

