திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (52). இவர் அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டபம் நடத்தி வந்தார். தற்போது மனைவி சாந்தி மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வந்தார். இவரது மகள் அருகில் உள்ள ஒரு தெருவில் இயங்கி வரும் டியூஷன் மையத்தில் படித்து வருகிறார்.

நேற்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காகக் கண்ணன் சென்றுள்ளார். டியூஷன் மைய வாசலில் நின்று கொண்டிருந்த மகளை அவர் அழைத்தபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் திடீரெனக் கண்ணனைச் சூழ்ந்து கொண்டு, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை தனது கண்முன்னே கொல்லப்பட்டதைக் கண்டு அவரது மகள் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

தகவலறிந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஸ் பா.சாஸ்திரி மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இக்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும் முன்விரோதம், இடப்பிரச்சினை, சொத்து தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற 4 பேர் கொண்ட மர்மக் கும்பலைத் தனிப்படைகள் அமைத்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.