முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா இன்று (10.11.2026 செவ்வாய்க்கிழமை) அதிகாலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. காலை 5:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு வேதியர்களின் வேத மந்திரங்கள் மற்றும் பக்தர்கள் முழங்கிய 'அரோகரா' கோஷத்துடன் யாகசாலை பூஜை முறைப்படி தொடங்கியது.
காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் யாகசாலையில் தீபாராதனை நடத்தப்பட்டு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
மாலை 3:00 மணிக்குச் சாயரட்சை தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் கண்டு, தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
6-ம் திருநாள் (நவம்பர் 15 - ஞாயிற்றுக்கிழமை) மாலை 4:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்யும் புகழ்பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.
7-ம் திருநாள் (நவம்பர் 16 - திங்கள்கிழமை) மாலையில் சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு 6:00 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.
கந்தசஷ்டி விரதம் தொடங்குவதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் குவியத் தொடங்கினர். சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

