தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா ராணாவை விதைப்பந்துகள் தயாரிப்பு மற்றும் பசுமை மேம்பாடு தொடர்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பில் விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், காந்தியவாதி விவேகானந்தன் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் எக்ஸ் நோரா தலைவியுமான டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். ஆட்சியரைச் சந்தித்த வெங்காடம்பட்டி திருமாறன் அவருக்கு விதைப்பந்துகளை வழங்கி, மாவட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக விளக்கினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேஹ்ராடூன் பகுதியின் அடர்ந்த மரங்கள் நிறைந்த கிராமத்து பின்னணியைக் கொண்டவர் என்பதால், தென்காசி மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா மாவட்டத்தில் பசுமை வளத்தை அதிகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். விதைப்பந்துகள் மூலம் மாவட்டம் முழுவதும் மரங்களை வளர்க்கும் திட்டத்தைத் தென்காசியில் செயல்படுத்த விருப்பம் தெரிவித்ததுடன், திட்டத்தின் விவரங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து எக்ஸ் நோரா தலைவி டாக்டர் விஜயலட்சுமி தனது மரம் வளர்ப்பு அனுபவங்களையும், மண்புழு ஆராய்ச்சி குறித்த விவரங்களையும் ஆட்சியரிடம் பகிர்ந்து கொண்டார். காந்தியவாதி விவேகானந்தன் தாம் எழுதிய காந்திய நூல்களை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிக் கௌரவித்தார்.

மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணாவின் பதவிக் காலத்தில் தென்காசி மாவட்டம் முழுவதும் சோலைவனமாக மாற ஆவன செய்ய வேண்டும் எனத் திருமாறன் வேண்டுகோள் விடுத்தார். இச்சந்திப்பின் போது அம்பை காந்தி உடனிருந்தார்.