நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவகச் சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வழிந்தோடி கடுமையான சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் தகவல் பரவியது.
இதன் எதிரொலியாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று சம்பந்தப்பட்ட உணவகத்தில் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உணவகத்தின் உணவு தயாரிப்பு முறை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் சுகாதார நிலை குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். இதில் விதிமுறைகளை மீறியது உறுதியானதை அடுத்து, உணவகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். மேலும், சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளால் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

