தமிழகத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை. இந்தச் சம்பவங்கள் குறித்த முழுமையான விவரங்களைத் தமிழக அரசு உடனடியாக மக்கள் மன்றத்தில் வெளியிட வேண்டும்.

காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஒரு மனித உயிருக்கு ரூ.40 லட்சம்தான் மதிப்பா? உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமையல்ல; இதுபோன்ற கொடூர உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே உண்மையான பொறுப்பாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதும், சீருடை அணிந்த காவல்துறையினரே வன்முறைக்குப் பலியாவதும் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. பொதுமக்களின் உயிருக்கும், காவல்துறையினரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையாகும்.

"வெறும் அறிவிப்புகளும் ஆய்வுக் கூட்டங்களும் நடத்தினால் மட்டும் போதாது. குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகக் களத்தில் செயல்பட வேண்டும். தமிழகத்தில் நிலவும் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு குறித்து முதலமைச்சர் மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிப்பது நிவாரணத் தொகை அல்ல; அவர்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான கடமை" என்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.