சென்னை கிண்டி மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண் கலெக்டர் விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கைது செய்யவும், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மனு அளித்தார்.
ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை கோரியுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த 6 மாதங்களில் 9 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது, பெண் கலெக்டர் விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தியும், புகாரளிக்க வந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆளுநரிடம் மனு அளித்தார். மேலும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துத் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்குமாறும் ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது: தவெக எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காத முதலமைச்சர், குற்றவாளிகள் பக்கம் நிற்கிறார். குற்றமே நடக்கவில்லை எனக் கூறிய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை தேவை. ஜூலை 31-ஆம் தேதி பெண் கலெக்டர் புகாரளித்த நிலையில், தலைமைச் செயலாளர் அதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றாரா?
வேறு மாவட்டத்திற்குச் சென்றுவிடுங்கள் எனக் கலெக்டரிடம் தலைமைச் செயலாளர் கூறியிருந்தால் அது குற்றத்தை மறைக்கும் முயற்சியாகும். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் தலைமைச் செயலாளர் பேரம் பேசியுள்ளார். 116 நாட்களாகக் குற்றம் மூடி மறைக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என மனு அளித்துள்ளோம்.
சட்டம்-ஒழுங்கு மற்றும் லாக்கப் மரணங்கள்:
தவெக ஆட்சியில் பெண் குழந்தைகள் மாயம் என்பது தினசரி செய்தியாக மாறிவிட்டது. முதலமைச்சர் குற்றவாளிகளைத் தண்டிப்பார் எனப் பார்த்தால், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துத் தீபாவளிப் பரிசு கொடுத்து அனுப்பியுள்ளார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் 9 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரண விவகாரத்தில் தற்கொலை என அரசு பொய் சொல்கிறது. செஞ்சி சிறுமியை விரைந்து கண்டுபிடிக்குமாறு கூறினால், அதற்கும் காவல் நிலையத்தில் யாகம் செய்கிறது தவெக அரசு.

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஆளுங்கட்சியினரே சிக்குகின்றனர்; இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு பெரிய நெட்வொர்க்கே உள்ளது. எனவே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்திலும் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

