பிரபல திரைப்பட இயக்குநர் அட்லீ, தயாரித்து வெளியாகி உள்ள 'பத்தா' திரைப்படத்தை தென்மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பதற்காக அவர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார்.

வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைசந்தித்துப் பேசிய இயக்குநர் அட்லீ கூறியதாவது: "தம்பி ஜேசனின் 'சிக்மா' திரைப்படம் சிறப்பாக உள்ளது. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'பத்தா' திரைப்படத்தையும் திரையரங்குகளில் அனைவரும் சென்று பாருங்கள், படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றார்.

மேலும், தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி மிகவும் சிறப்பாகவும் நன்றாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.

தற்போது தனது அடுத்தகட்டத் திரைப்படப் பணிகள் குறித்துப் பேசிய அட்லீ, "தற்போது 'ராக்கா' திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறேன். விரைவில் தென் மாவட்டங்களின் பின்னணியை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் இயக்குவேன்" என்றார்.

முன்னதாக, இடைத்தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது குறித்துப் பேச விரும்பவில்லை எனத் தெரிவித்து அவர் கடந்து சென்றார்.