தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுவதோடு, ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள 'எக்ஸ்' (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: "இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழக முதல்வர் விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன்முறையாகக் கேட்டேன். அவர் மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களையும் மிகச் சரியாக உச்சரிக்கிறார். இதைக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி.
இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் எல்லோரும்... குறிப்பாக நமது இளம் மாணவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையுமே மிகச் சரளமாகப் பேச வேண்டும்; சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்."
"மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முறையான பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களையும், ஆங்கில ஆசிரியர்களையும் அரசு நியமிக்க வேண்டும். தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பது வெறும் ஏட்டளவில் மட்டும் நின்றுவிடக் கூடாது.
அது தமிழகம் முழுவதிலும் முழுமையாக நடைமுறைக்கு வர வேண்டும்" என ப.சிதம்பரம் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

