இது குறித்துத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மத்திய பாஜக அரசின் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆகியோர் கடந்த காலத் தேர்தல்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதுடன், எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமையைப் பறித்து ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தனர்.

இந்த அநீதியைச் சுட்டிக்காட்டியும், தலைமைத் தேர்தல் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் 'இந்தியா' கூட்டணியின் தோழமைக் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 2023-இல் இயற்றப்பட்ட தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், சிறப்பு வாக்காளர் திருத்த முறைகேடுகளைக் கண்டித்துப் பலமுறை வலியுறுத்தியும், மத்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எஸ்.ஐ.ஆர் திருத்தங்களை மேற்கொண்டது இன்று நாளிதழ்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோரின் உத்தரவின்படி, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஜனநாயக விரோதமாகச் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவரைக் கைது செய்து கடும் தண்டனை வழங்குவதோடு, அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இப் போராட்டம் 28.09.2026 (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ் மற்றும் சுடலைஆண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர்.

எனவே, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.