கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 11 -வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் இன்று (24.09.2026) கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில்- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான ஆயுர்வேதம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு பேரணி துவங்கப்பட்டுள்ளது. பேரணியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஆயுர்வேதா என்பது நமது நாட்டின் ஒரு பழம்பெரும் மருத்துவமுறையாகும். ஆயுர்வேதம் தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
அந்த ஐயங்களை போக்க வேண்டும், என்பதற்காகவும், ஆயுர்வேத மருத்துவத்தை பொதுமக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த ஆயுர்வேதா தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆயுர்வேதா தினத்தில் நம்முடைய மாவட்டத்தில் பேரணி மட்டுமல்லாது, பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பதாகைகள், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்களுக்கு நம்முடைய ஆயுர்வேதத்திலும் அவர்களுக்கான மருந்துகள் உள்ளன. அதன்வாயிலாக குணமடைவது இருக்கும் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் கேரள மாநிலத்தைப் போன்று, நமது மாவட்டத்திலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் 'நலச்சுற்றுலா' (Wellness Tourism) திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பரிசீலனைக்கு பின் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் மேம்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் பேசினார்.
பேரணியில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் கிளாரன்ஸ் டேவி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தோட்டவரம் ஆத்தூர் மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நட்டாலம் மார்த்தாண்டம் இம்மானுவேல் அரசர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

