தேர்தல்களில் முறைகேடு நடப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டே, அதில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பது அத்தகைய முறைகேடான தேர்தல்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றது என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர் சர்ச்சையும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும்:
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதனை நடைமுறைப்படுத்தியதாகச் செய்திகள் வெளியாயின. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இத்தகைய முறைகேடான தேர்தல்களை எதிர்க்கட்சிகள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இந்தியாவில் தேர்தல்கள் முறைகேடாக நடத்தப்படுகின்றன. ஆனால், முறைகேடுகள் நிறைந்த இத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அவற்றுக்கு நீங்களே அங்கீகாரம் அளிக்கிறீர்கள். அத்துடன், தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவது போன்ற ஒரு மாயையைத் தக்கவைக்கவும் உதவுகிறீர்கள்.
தேர்தலில் போட்டியிடாவிட்டால் அரசியலில் முகவரி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நீங்கள் தொடர்ந்து போட்டியிடலாம். ஆனால், வாக்குகள் திருடப்படும்போது, உங்கள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் கைபற்றப்படும்போது, உங்கள் கட்சிகள் பிளவுபடுத்தப்படும்போது நீங்கள் எதைப் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள்?
உங்களைப் பலவீனப்படுத்தவும், உங்கள் கட்சியைப் பிளவுபடுத்தவும் முயலும் ஒரு அமைப்பில் நீங்கள் உயிர்வாழ மட்டுமே முயற்சிக்கிறீர்கள். விளையாட்டு முறைகேடாக நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே அதே விளையாட்டைத் தொடர்ந்து விளையாட முடியாது.
உங்களுக்குத் தேவையான மாநிலங்களில் தேர்தல் முறைகேடு நடக்கும்போது மட்டும் பேசிவிட்டு, மற்ற இடங்களில் மௌனமாக இருக்கிறீர்கள். உங்கள் சொந்த அரசியல் இருப்பைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பாக, நாட்டையும் ஜனநாயகத்தையும் பற்றிச் சிந்தியுங்கள். ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, முறைகேடுகள் நிறைந்த தேர்தல்களில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

