தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 28 அன்று தொடங்கி வைக்கவுள்ள 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தையொட்டி, தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வுக்கூட்டம் நடத்தி நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் வகையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 28-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.

இத் திட்டத்திற்காகத் தூத்துக்குடி மாவட்ட அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் தங்க மோதிரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு அறையின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மருத்துவ அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை (25.09.2026) விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தங்க மோதிரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தின் தரம், பாதுகாப்பு அறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் பொருத்தப்படவுள்ள கண்காணிப்பு கேமராக்கள் விபரங்கள் குறித்தும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பயனாளிகள் தொடர்பான விவரங்களை முறையாக பதிவு செய்து பராமரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள கணினி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், கைரேகை கையாளும் கருவி மற்றும் QR குறியீட்டு இயந்திரங்கள் அமைக்கபடுதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. பிரியதர்ஷினி, தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யாழினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பத்மநாதன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.