முன்னணி அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), தனது வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளை வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கடம்பூரில் தனது 632-வது புதிய கிளையை தொடங்கியுள்ளது.
புதிய கிளையை அயரவன்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் முருகேசன் திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில் வங்கியின் செயல் துணைத் தலைவர் திரு. பிஆர் அசோக் குமார், மண்டல மேலாளர் பரணீதரன், வங்கியின் அதிகாரிகள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் கூறியதாவது: "தமிழ்நாடு முழுவதும் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தைகளில் எங்களது இருப்பை மேலும் வலுப்படுத்தும் உத்தியுடன் இந்தக் கிளை விரிவாக்கம் இணைந்துள்ளது.
வேளாண்மை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் உள்ளூர் வர்த்தகத்தை மையமாகக் கொண்ட இப்பகுதிகளில் நேரடியாக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தி, தேவைக்கேற்ற கடன் மற்றும் வைப்புத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதில் நேரடிக் கிளைகள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகின்றன. வலுவான நிர்வாகம் மற்றும் விவேகமான இடர் மேலாண்மையை அடிப்படையாகக் கொண்ட நிலையான வளர்ச்சியே எங்களது முக்கிய நோக்கமாகும் என்றார்.
புதிய கடம்பூர் கிளையில் சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், கால வைப்புகள், MSME நிறுவனங்களுக்கான நிதியுதவி, வேளாண்மைக் கடன்கள் மற்றும் இதர கடன் திட்டங்கள் உள்ளிட்ட முழுமையான சில்லறை மற்றும் வணிக வங்கிச் சேவைகள் வழங்கப்பட உள்ளன.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தற்போது இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 632 கிளைகள் மற்றும் 13 மண்டல அலுவலகங்கள் வாயிலாக 53 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது.

