தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105வது நிறுவன தின விழா நாளை (11.11.2026, புதன்கிழமை) பகல் 12 மணி முதல் தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

1921-ம் ஆண்டு தூத்துக்குடி வணிகர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய வங்கியே தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. 105 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவ்வங்கி, இந்தியாவிலேயே பழமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக திகழ்கிறது. தூத்துக்குடி மண்ணில் தோன்றி இன்று நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வங்கியின் நிறுவன தின விழாவிற்கு தலைமை விருந்தினராக இந்திய துணை ஜனாதிபதி மாண்புமிகு சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலை வகிக்கிறார்.

வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குனர் குழு உறுப்பினர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் சார்பில் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

காலை தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கும். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி, வங்கியை உருவாக்கிய நிறுவன இயக்குனர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.செயல் இயக்குனர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105 ஆண்டு கால பயணத்தை விளக்கும் காணொலி காட்சி திரையிடப்படுகிறது.

பின்னர் பகுதி நேர தலைவர் உரையாற்றுகிறார். விழாவின் முக்கிய அம்சமாக புதிய கிளை திறப்பு மற்றும் புதிய தயாரிப்பு அறிமுகம் ஆகியவை மெய்நிகர் முறையில் (Virtually) நடைபெற உள்ளது.

தொடர்ந்து நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி உரையாற்றுகிறார். இறுதியாக தலைமை விருந்தினர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். விழா தேசிய கீதத்துடன் நிறைவு பெறும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

இவ்விழாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நுழைவு அழைப்பிதழ் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரு அழைப்பிதழில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் தோன்றிய வங்கி தனது 105வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், துணை ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பங்கேற்கும் இவ்விழா தூத்துக்குடி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.