தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கரண்குமார். இவர் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் பாண்டவர்மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மது வாங்குவதற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாகச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த கிளவிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் சுந்தர்ராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் கரண்குமாரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது.

ஆத்திரமடைந்த சுந்தர்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் சோ்ந்து கரண்குமாரை அவதூறாகப் பேசி, பலமாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இத் தாக்குதலில் காயமடைந்த கரண்குமார் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துக் கரண்குமார் அளித்துப் புகாரின் பேரிலும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரிலும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட கிளவிப்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.