சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு, சென்னைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை நியமிப்பதே மிகச் சிறந்த முடிவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பரிந்துரைத்துள்ளார்.
ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக், உள்ளூர் போட்டிகளில் தமிழக அணியை வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். இதுகுறித்து 'விஸ்டன் கிரிக்கெட் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பேசிய மேத்யூ ஹைடன் கூறியதாவது: "சி.எஸ்.கே. அணிக்குத் தினேஷ் கார்த்திக் ஒரு மிகச் சிறந்த தேர்வாக இருப்பார். ஆண்டி பிளவர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலில் வெற்றிகரமான விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையை அவர் கண்டுள்ளார்.
குறிப்பாக, அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த உள்ளூர் வீரர் என்பது மிகப்பெரிய சாதகமான விஷயம். சி.எஸ்.கே. அணிக்கு எப்போதும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவு இருந்துள்ளது. எனவே, சி.எஸ்.கே. நிர்வாகம் ஒரு உள்ளூர் அடையாளத்தைக் கொண்ட நபரைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுப்பது அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்" என்று கூறினார்
மேலும் பேசிய ஹைடன், "சி.எஸ்.கே. அணியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எம்.எஸ். தோனி இன்னமும் முக்கியப் பங்காற்றி வருகிறார். எனவே, புதிய பயிற்சியாளர் அவரோடு நல்ல இணக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். தோனியுடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடியுள்ளதால் தினேஷ் கார்த்திக்கிற்கு இது மிகவும் எளிதாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் உள்ளூர் தமிழ் வீரர்களைத் தங்களின் அணியில் சேர்த்துள்ள வேளையில், சி.எஸ்.கே. அணி வெளி மாநில வீரர்களைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டிய ஹைடன், வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கும் உள்ளூர் இளம் வீரர்களுக்கும் இடையே மொழிரீதியான தொடர்பைப் பலப்படுத்தத் தினேஷ் கார்த்திக் போன்ற உள்ளூர் பயிற்சியாளர்களின் பங்களிப்பு சி.எஸ்.கே. அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் எனத் தெரிவித்தார்.

