திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் சக்கையாநாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல் என்பவரின் மகள் வென்சியா. இவருக்கு நாளை (செப்டம்பர் 13) திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், வென்சியா தனது வருங்கால கணவருடன் மதுரையில் நடைபெறவிருந்த செவிலியர் தேர்வை எழுதுவதற்காக இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வாடிப்பட்டி அருகே உள்ள சாணம்பட்டி பிரிவு பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்தது. அக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணப்பெண் வென்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்தில் பலத்த படுகாயமடைந்த மணமகனை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

