செஞ்சி அருகே 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி மாயமான வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தித் துன்புறுத்தியதாகச் சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7), கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து மாயமானார்.

சிறுமி மாயமாகி 48 நாட்களான நிலையில், இவ்வழக்கைச் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்படச் சுமார் 60-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு தங்களை வற்புறுத்திச் சித்ரவதை செய்வதாகக் கூறி, ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26 - கைப்பேசி விற்பனையகம் நடத்துபவர்), கமல்ராஜ் (25 - சென்னையில் சரக்கு வாகனம் ஓட்டுபவர்) மற்றும் ரேணு (30 - பெங்களூரில் கூலி வேலை செய்பவர்) ஆகிய 3 இளைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. மதிவாணனிடம் நேற்று புகார் அளித்தனர்.

புகாரில், வழக்கு தொடர்பாகச் சந்தேகத்தின்பேரில் கடந்த ஒரு வார காலமாகத் தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும், உண்மைக்கு மாறாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்துவதாகவும், அதற்குப் பதிலாக ரூ. 2 லட்சம் தருவதாகக் கூறுவதாகவும் சிபிசிஐடி போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர். சிபிசிஐடி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இனி இதுபோல் நடக்காது என அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.