தவறை ஒப்புக்கொண்டு குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்ட ஜென்சனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டுத் தேசிய புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்களுக்குத் தேவையான அதிவேக ‘ஜி.பி.யு’ (GPU) சிப்களைத் தயாரிக்கும் உலகின் முன்னனி தொழில்முறை சாம்ராஜ்யமான ‘என்விடியா’ நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓ-வுமான ஜென்சன் ஹூவாங் (63), சீன அரசின் ‘ஹனி டிராப்’ (Honey Trap) சதி வலையில் சிக்கியுள்ள விவகாரம் சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் காரணமாக அதிநவீன என்விடியா சிப்களைச் சீனா நேரடியாக இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், என்விடியாவின் தொழில்நுட்ப ரகசியங்களைக் கைப்பற்றச் சீன உளவுத்துறை திட்டமிட்டது.

இதற்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘மெகாஸ்பீட் இன்டர்நேஷனல்’ என்ற தரவு மைய நிறுவனத்தின் உயர் அதிகாரி போர்வையில் உலா வந்த ஹூவாங் லே (என்ற) ஆலிஸ் என்ற சீனப் பெண் உளவாளியைச் சீனா களமிறக்கியது. 2024-ஆம் ஆண்டு முதல் ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட ஜென்சனை, தனது வசீகரப் பேச்சினாலும் அழகினாலும் ஆலிஸ் வளைத்துப் போட்டுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விருந்துகள் மற்றும் பரிசுகள் மூலம் ஜென்சனுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திய ஆலிஸ், அதிவேக சிப் தயாரிப்பு ரகசியங்களை நயவஞ்சகமாகப் பறித்துச் சீனாவுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீன உளவாளியுடனான கள்ளத் தொடர்பு அம்பலமானதைத் தொடர்ந்து, ஜென்சன் ஹூவாங் தனது தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நான் என் மனைவிக்குத் துரோகம் இழைத்துவிட்டேன். எனது செயலால் என் குடும்பத்தினர் சொல்லொணா வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு எந்தச் சாக்குப்போக்கும் கூற முடியாது; என் குடும்பத்தாரிடமும், நிறுவனப் பங்குதாரர்களிடமும் ஆழமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஜென்சன் ஒரு நேர்மையான மற்றும் கண்ணியமான மனிதர். அமெரிக்க நாட்டிற்காக அவர் மிகச்சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். அவருக்கு இதில் ஏதேனும் நியாயமான காரணம் இருக்கும் என நம்புகிறேன்" என்று பகிரங்க ஆதரவு தெரிவித்தார்.

இருப்பினும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அமெரிக்கத் தேசிய புலனாய்வு அமைப்புகளும் நாடாளுமன்றக் குழுக்களும் இந்த 'ஹனி டிராப்' விவகாரத்தை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. அதேவேளையில், என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் இதுகுறித்து சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.