ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஏமன் அரசுப் படைகளுக்குச் சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி படைகளுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.
சமீபத்தில் சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவின் அப்ஹா, கமிஸ் முஷித், ஜசன் மற்றும் நிஜ்ரன் ஆகிய நகரங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், சர்வதேச விமான நிலையம், ராணுவத்தின் விமானப்படைத் தளம் மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மையங்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரமாரித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 73 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குச் சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதற்குப் பொருத்தமான முறையில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்தத் தொடர் மோதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் கடுமையான போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.

