கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பாக கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சமுதாய வளைகாப்பு விழா கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட கருமாவிளை சி.எஸ்.ஐ. சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசைப் பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் பேசியதாவது: "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தாய்மார்கள் கருவுற்ற நாளிலிருந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மன மகிழ்ச்சியுடனும், புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் மட்டுமே குழந்தை நல்ல உடல்நலனுடனும் அறிவுத்திறனுடனும் பிறக்கும்.

இரத்த சோகையைத் தடுக்க இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தையின் எடை குறைந்தது 3 கிலோ வரை இருக்க வேண்டும். தாய்மார்கள் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் மற்றும் மகளிர்க்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் போன்ற பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தாய்மார்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்புத் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உணவு பிரமிடு, சிறுதானிய உணவு செயல்முறை விளக்கம் மற்றும் சரிவிகித உணவு முறைகள் குறித்த கண்காட்சியினை ஆட்சியர் மு.பிரதாப்புடன் இணைந்து அமைச்சர் பார்வையிட்டார்.

இவ்விழாவில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) காயத்ரி, கருங்கல் பேரூராட்சித் தலைவர் சிவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.ஸ்டாலின் ஜோஸ், ராஜகுமார், செயல் அலுவலர் சத்யராஜ், முஞ்சிறை வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோமதி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிந்துகுமார் மற்றும் கர்ப்பிணிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.