கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சுமார் 55 சவரன் தங்கக் கிரீடம் மாயமாகி, அதற்குப் பதிலாக போலி கிரீடம் வைக்கப்பட்டது திருவாபரணக் கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் 445.78 கிராம் (சுமார் 55.72 சவரன்) எடைகொண்ட மதிப்பிலான தங்கக் கிரீடத்தைச் சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கினர். இக்காணிக்கை குறித்த விவரங்கள் கோவில் பதிவேடுகளிலும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள திருவாபரணங்களைச் சரிபார்க்கும் பணிகள் நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இக்குழுவினர் நடத்திய ஆய்வின் போது, 55 சவரன் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலி கிரீடம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.

பாதுகாப்பு அறையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதியில் இக் கிரீடம் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆரன்முளா 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க மாலையும் மாயமாகியுள்ளது இக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தேவஸ்வம் போர்டு தலைவர் எச்சரிக்கை:

இச்சம்பவம் குறித்துத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கூறுகையில், "தங்கக் கிரீடம் மாயமானது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்படும். இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே சன்னிதான துவார பாலகர் சிலைகளில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 55 சவரன் தங்கக் கிரீடம் மாயமாகியுள்ள சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.