திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் முன்நோட்டக் காட்சிகள், கடுமையான ரகசிய ஒப்பந்தங்களை மீறி சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாகக் கசியவிடப்பட்டுப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், ரூ.2,000 கோடி செலவில் முதல் பாகமும், ஒட்டுமொத்தமாக ரூ.4,000 கோடி மெகா பட்ஜெட்டிலும் தயாராகியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 5-ஆம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனையொட்டி, இப்படத்தின் கதை, காட்சிகள், பாடல்கள் உள்ளிட்ட அனைத்துக் காப்புரிமைகளையும் தன்வசம் வைத்துள்ள காட்பவர் மீடியா (Kavithambar Media) நிறுவனம், இணையதள திருட்டுக் கும்பல்களிடமிருந்து படத்தைப் பாதுகாக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார், தயாரிப்பு நிறுவனத் தரப்பிற்கு உண்மையான மற்றும் நியாயமான அச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் இத்திரைப்படத்தை அனுமதியின்றி வெளியிடக் கடுமையான இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும், காப்புரிமையை மீறும் இணைய முகவரிகள் குறித்துத் தகவல் கிடைத்ததும் அவற்றை உடனடியாக முடக்கி நீக்க வேண்டும் என்று இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கும் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் டிசம்பர் 16-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

