தனக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்த நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி, நடிகர் சத்யராஜின் மகளும் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், "திருமணம் செய்து கொண்டதற்காக மட்டும் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதில்லை. மதம் மற்றும் ஜாதகத்தின் அடிப்படையிலான திருமணங்களில் எனக்கு நம்பிக்கையில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்பேட்டி குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன், திவ்யா சத்யராஜ் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பயில்வான் ரங்கநாதன் ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தன்னைப் பற்றி மேற்கொண்டு அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்கக் கோரியும் திவ்யா சத்யராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மேலும், தனக்கு எதிரான அவதூறு வீடியோக்களைத் தொடர்ந்து ஒளிபரப்பக் கூகுள், ஃபேஸ்புக், எக்ஸ் ஆகிய சமூக வலைதளத் தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இவ் வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, திவ்யா சத்யராஜுக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவிக்க நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், திவ்யாவுக்கு எதிரான ஆட்சேபகரமான மற்றும் அவதூறான கருத்துகளை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது எனச் சம்பந்தப்பட்ட கூகுள், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

