தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: "தமிழக வெற்றிக் கழகத்தினர் முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் எனக் கூறுவது 2026-ம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியைப் பற்றி தினமும் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்று தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் ரீல்ஸ் போட்டு இளைஞர்களையும் பெண்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ரீல் விட்டு ஆட்சியைத் தொடரப் பார்க்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்திய மக்களையே ஏமாற்றலாம் என்று ரீல் விட்டுப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் வரும் காலத்தில் சரியான தீர்ப்பைத் தருவார்கள்" எனக் குறிப்பிட்டார்.
தனியார் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் பிரதமர் வரிசையில் மூன்றாவது இடத்தில் முதல்வர் விஜய் கொண்டு வரப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கருத்துக் கணிப்புகளை நான் என்றுமே நம்புவதில்லை. எனவே இதுகுறித்துக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
தர்மபுரி மாவட்டச் செயலாளராக இருந்த டிகே ராஜேந்திரன் அமமுக-வில் இருந்து விலகியது குறித்துக் கேட்கப்பட்டபோது, "சனிக்கிழமை சந்தையில் ஒரு கூட்டம் சேர்வதும் கலைவதுமான கதைதான் இது. பதவி கிடைக்கவில்லை என்ற ஒரே விரக்தியில்தான் டிகே ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

