தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு ஆரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி கார்த்திகா. தந்தையை இழந்த இவர், பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

இச்சாதனையின் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர மாணவி கார்த்திகாவிற்கு இடம் கிடைத்துள்ளது. மாணவியின் சாதனையைக் கேள்விப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஜிவி மார்கண்டேயன், மாணவி கார்த்திகாவை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், மாணவி கார்த்திகாவின் குடும்பச் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது 5 ஆண்டுகால மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்து, நிதி உதவி வழங்கி வாழ்த்தினார். எம்.எல்.ஏ-வின் இந்த உதவியை அப்பகுதி பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.