தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், வசதி வாய்ப்பற்ற மக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை நீடித்து வருகிறது.

அய்யனடைப்பு அருகே சிப்காட் பகுதிக்குச் செல்லும் குடிநீர் குழாயில் இருந்து ஒரு பொதுக் குழாய் அமைத்து, அப்பகுதி மக்களுக்குத் தினசரி குறைந்தபட்சம் தலா 5 குடங்கள் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குடிநீர் பிரச்சனை மட்டுமின்றி, தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் மினி பேருந்து வசதி போன்ற அடிப்படைத் தேவைகளும் அப்பகுதியில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாகப் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அய்யனடைப்பு பகுதிக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்து, குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதுடன் சாலை, தெருவிளக்கு மற்றும் மினி பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.