தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் கீழ், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து 4 வகைகளாகப் பிரிக்கப்பட்ட கழிவுகளை வீடு வீடாகச் சேகரிக்கும் முறை செப்டம்பர் 1, 2026 முதல் தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கழிவுகளைப் பின்வரும் 4 பிரிவுகளாகப் பிரித்து, அதற்குரிய வண்ணத் தொட்டிகள் அல்லது பைகளில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்:

• ஈரக்கழிவு / மக்கும் கழிவு (பச்சை வண்ணக் குறியீடு): சமையலறைக் கழிவுகள், சமைத்த/சமைக்காத உணவு, காய்கறி, பழங்கள், இறைச்சி, பூக்கள், தேயிலை/காபித் தூள், முட்டை ஓடுகள். (சேகரிப்பு: தினமும்)

• உலர் கழிவு / மக்காத கழிவு (நீல வண்ணக் குறியீடு): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி, அட்டைப் பெட்டிகள், துணிகள் மற்றும் பொதிப் பொருட்கள். (சேகரிப்பு: தினமும்)

• சுகாதாரக் கழிவு (சிவப்பு வண்ணக் குறியீடு): பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், டாம்பன்கள், ஆணுறைகள், சிறுநீர்க் கசிவுத் தாள்கள். (சேகரிப்பு: தினமும்)

• சிறப்புக் கவனிப்புக் கழிவு / வீட்டு அபாயகரக் கழிவு (கருப்பு வண்ணக் குறியீடு): பெயிண்ட் டப்பாக்கள், பூச்சிக்கொல்லி கலன்கள், CFL/டியூப் லைட்டுகள், காலாவதியான மருந்துகள், மின்கலன்கள் (Batteries), ஊசிகள்/சிரிஞ்சுகள், மின்னணுக் கழிவுகள் (E-waste). (சேகரிப்பு: வாரம் ஒருமுறை - ஒவ்வொரு புதன்கிழமையும்)

WasteLIst.jpg

செப்டம்பர் 1, 2026 முதல் பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிக்கப்பட மாட்டாது. மாநகராட்சியின் இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.