நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடத்தில் அமைந்துள்ள நாங்குநேரி ரயில் நிலையத்தில், பழுதடைந்திருந்த நடைமேடை விளக்குகள் உடனடியாகச் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளதாவது "நாங்குநேரி ரயில் நிலையத்தில் (NSG-5 பிரிவு) இரட்டை ரயில் பாதை பணிகளுக்குப் பிறகு, பெரும்பாலான ரயில்கள் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில்தான் இயக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க மற்றும் பயணிகள் தரப்பில் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அவசரக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் கோட்ட மக்கள் குறைதீர்ப்புப் பிரிவு (PG Cell/TVC) மற்றும் மின்சாரத்துறை உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சாரத்துறையினரின் ஆய்வறிக்கையின்படி, நாங்குநேரி ரயில் நிலையம் நடைமேடை 2 மற்றும் 3-ல் பழுதடைந்திருந்த மொத்தம் 15 விளக்குகள் கடந்த 09.09.2026 அன்று முற்றிலுமாக மாற்றப்பட்டு புதிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது அனைத்து விளக்குகளும் சீராக எரிவதாகவும், இதனால் இரவு நேரப் பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுத் துரிதமாகச் செயல்பட்டு விளக்குகளைச் சீரமைத்த ரயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

