பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட புகாரில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும், செப்டம்பர் 24-ஆம் தேதி தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்திலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. பாஜக உறுப்பினரான எம்.எச். ஸ்ரீஸ்ரீமால் அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ராகுல் காந்திக்குச் சம்மன் அனுப்பியது.

இந்தச் சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆர். போர்கர் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தவிதமான சட்டவிரோதத் தன்மையும் இல்லை என்று நீதிபதி போர்கர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட தனிநபருக்கு எதிராகவே கருத்து கூறப்பட்டதால், பாஜக உறுப்பினரான மனுதாரர் பாதிக்கப்பட்ட தரப்பினர் அல்ல என்ற ராகுல் காந்தியின் வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பாரதிய ஜனதா கட்சி என்பது குறிப்பிட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு என்றும், பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியின் முக்கிய முகமாகத் திகழ்வதால் அவருக்கு எதிராகக் கூறப்படும் கருத்துகள் அக்கட்சியின் உறுப்பினர்களைப் பாதிக்காது என்று கூற முடியாது என்றும் நீதிபதி போர்கர் தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, கீழ் நீதிமன்ற விசாரணைக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் சுதீப் பாஸ்போலா கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற நீதிபதி போர்கர், அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கீழ் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் வரை ராகுல் காந்தி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமிருக்காது.