பிளஸ் 2 பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ரவுடிக்குத் தூக்கு தண்டனையும், அவரது நண்பர்கள் இருவருக்குச் சிறை தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்தார். அப்போது பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஆலயத்தில் பெயிண்டிங் வேலைக்காகத் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (27) என்பவர் வந்துள்ளார். இதில் சிறுமிக்கும் முனீஸ்வரனுக்கும் செல்போன் வழியே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமிக்கு பெற்றோர் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட முனீஸ்வரன், தனது அக்கா வீட்டிற்குச் செல்லலாம் என்றும், அங்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி, இருசக்கர வாகனத்தில் கீழ வீரராகவபுரம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்துச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அங்கு முனீஸ்வரனுடன், வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி (27) மற்றும் கீழ வீரராகவபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (27) ஆகிய இருவர் இருந்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் சிறுமியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து, மிரட்டி அடிக்கடி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனிடையே மாணவியின் புகைப்படங்கள் பரவிய நிலையில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் சென்றதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 3 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதி சுரேஷ்குமார் தண்டனை விவரங்களை அறிவித்தார்.
அதில், ரவுடி பட்டியலிலுள்ள சின்னக்குட்டிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த வாரமும் நெல்லை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போதும் போக்சோ குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

