தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்வது மற்றும் அவரது மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாயமான பிளஸ்-2 மாணவி, காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள காற்றாலையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இவர் ஏற்கனவே மூதாட்டி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தர்மமுனீஸ்வரனுக்குத் தூக்குத் தண்டனை விதித்து கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி காவல் துறை தரப்பிலும், தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தர்மமுனீஸ்வரன் தரப்பிலும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர்கள் மயில்வாகன ராஜேந்திரன், சந்திரசேகர், பிரியா ஆகியோர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதம்: "மாணவியைக் கொலை செய்ததற்கான அறிவியல் பூர்வமான சாட்சியங்களைப் சேகரித்துத் தாக்கல் செய்துள்ளோம். பல்வேறு சாட்சியங்கள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில்தான் போக்சோ நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. எனவே, இத்தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்."
பிரதிவாதி & நீதிமன்ற உதவி வழக்கறிஞர்கள் வாதம்: "கொலையாளியைக் கண்டுபிடிக்க அப்பகுதியைச் சேர்ந்த பலரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தர்ம முனீஸ்வரனை அவசர அவசரமாகக் கைது செய்துள்ளனர்.
தடயவியல் மற்றும் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே வழக்கை முடித்து 11 நாட்களில் விசாரணை நடத்தித் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை; பல்வேறு சந்தேகங்கள் உள்ளன." எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

