மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது.
மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கேரள சட்டப்பேரவையில் கடந்த மாதம் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கொல்லம் மாவட்டம் பதனாபுரத்தில் முதியவர்களுக்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன தங்குமிடத்தைக் கேரள முதல்வர் வி.டி. சதீசன் திறந்து வைத்துப் பேசினார்.
அப்போது, இந்தப் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கியதாவது: "முதியோருக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கும் வகையில், உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு சட்டத்தை எனது அரசு நிறைவேற்றியுள்ளது. பெற்றோரின் சொத்துகள் அனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு, அவர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் பிரிவை இந்தச் சட்டத்தில் நான் வேண்டுமென்றே சேர்த்துள்ளேன்.
எனவே, முதியவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வந்தவுடன், பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கைவிடுபவர்கள் நிச்சயமாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கேரளத்தில் எந்தவொரு முதியவரும் தனிமையில் விடப்படக் கூடாது என்பதே எனது மிகப்பெரிய கனவு." இவ்வாறு முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தார்.

