காரைக்காலில் பெண் காவலரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சுப்பிரமணியனை நிரந்தரப் பணிநீக்கம் செய்து புதுவை தலைமைச் செயலாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சுப்பிரமணியன் (54), முன்னதாக காரைக்காலில் பணியாற்றியபோது அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் திருமணமான பெண் காவலர் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கொடுமையால் மனமுடைந்த அப்பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு, சுப்பிரமணியன் புதுவை மேற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயார் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார். இது குறித்துத் துறைசார்ந்த உள் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்ட போதிலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பெண்ணின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி எஸ்.பி. சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். தொடர்ந்து, செப்டம்பர் 28-ஆம் தேதி அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சுப்பிரமணியன், ரூ.25 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் பெற்றார். அதன்படி, அவர் காரைக்கால் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில், புதுவை தலைமைச் செயலாளர் சரத் சவுகான், காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியனை நிரந்தரப் பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.