தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த பாப்பான்குளம் பாட்டத்தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் கருப்பசாமி (42), விவசாயி. இவரது மனைவி பால்கனிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த கருப்பசாமி கண்டித்துள்ளார்.

உடனே பால்கனி, கணேசனுடன் கேரள மாநிலத்திற்குச் சென்றுவிட்டார். தனது மனைவியை அழைத்துச் சென்ற கணேசன் மீது கருப்பசாமி கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால், கணேசனின் மனைவி ஈஸ்வரியை கடந்த 25.03.2016 அன்று கருப்பசாமி வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருந்த கருப்பசாமி, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், 07.12.2016 அன்று ஈஸ்வரியின் சகோதரர்களான அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (53), வைகுண்டம் (48), குமார் (48) ஆகிய 3 பேரும் சேர்ந்து, பழிக்குப் பழியாக வெள்ளிகுளம் உய்க்காடு சுடலைமாடசாமி கோவில் அருகில் வைத்து கருப்பசாமியை வெட்டிப் படுகொலை செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்குத் தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி ராஜவேல் தீர்ப்பு அளித்தார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன், வைகுண்டம், குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அருண் ஆஜராகி வாதாடினார்.