நெல்லை மாநகரக் காவல் துறையில் கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஜோயல். 24 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நெல்லை மாநகரக் காவல் ஆணையருக்கு அவர் ஆடியோ ஒன்று அனுப்பி வைத்தார்.

அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் தலைமைக்காவலர் ஜோயல் தெரிவித்திருப்பதாவது:

"கடந்த 35 நாட்களாக எனக்குக் கடுமையான பணிச்சுமை கொடுக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் அழகர் என்பவர் எனக்குக் கடுமையான மன உளைச்சலையும், பணியில் அதிகத் தொந்தரவுகளையும் கொடுத்து வருகிறார்.

இதனால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன். தற்போதையச் சூழலில் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்குத் தள்ளப்பட்டுள்ளேன்" எனக் கதறியிருந்தார்.

உயர் அதிகாரி மீது குற்றம்சாட்டித் தலைமைக்காவலர் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநகரக் காவல் ஆணையர் அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். முறையாக உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காமல், சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டுத் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்காகத் தலைமைக்காவலர் ஜோயலைச் சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தன் மீது அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கூறிய தலைமைக்காவலரைப் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் மாநகரக் காவல்துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.