திரைப்பட தயாரிப்பாளர் அளித்த பண மோசடி வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்குச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 15 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மீஞ்சூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சரவணன், கடந்த 2022-ஆம் ஆண்டு படம் ஒன்றைத் தயாரிப்பதற்காக நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.50 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்துள்ளார். ஆனால், அப்படத்தின் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முன்பணத்தைத் திரும்பக் கேட்ட தயாரிப்பாளர் சரவணனுக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத் தலையீட்டின் மூலம் ரூ.10 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.40 லட்சத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறி, சரவணன் ஈஞ்சம்பாக்கம் காவல் நிலையத்திலும், பொன்னேரி நீதிமன்றத்திலும் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ராஜ்கிரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2022-இல் நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4 ஆண்டுகள் கழித்து என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் (Civil) சார்ந்த இச் சம்பவத்திற்குக் குற்றவியல் சாயம் பூசப்படுகிறது. தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமான நான் தலைமறைவாக மாட்டேன் என்பதால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

