தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாதாந்திர மாவட்டப் பள்ளிக் கல்விச் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களைச் சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத் துறை, மீன்வளத் துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நலத் துறை மற்றும் சமூக நலத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மீண்டும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இடைநிற்றல் வாய்ப்புள்ள மாணவர்கள் மற்றும் விடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும், கடந்த 2022-23 முதல் 2025-26 வரையிலான நான்கு ஆண்டுகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்கள் குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது: வரும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் டெங்கு மற்றும் தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகள் மற்றும் விடுதிகளின் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்; குடிநீர்த் மேல்நிலைத் தொட்டிகளைக் குளோரினேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
காலை உணவுத் திட்டச் சமையலறைக் கட்டடங்களைச் சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும். உணவுப் பொருட்களைத் தரையில் வைக்காமல் பலகைகளின் மேல் வைத்துப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் தங்களது பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரம் பகுதியில் உள்ள எம்கே உயர்நிலைப்பள்ளி மற்றும் எம்எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 14 வயது முடிந்த பெண் குழந்தைகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக 100 சதவீதம் 'எச்.பி.வி' தடுப்பூசி செலுத்தியதைப் பாராட்டி, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கி கௌரவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் யாழினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் முனியசாமி, முருகேசன், சீதாமகேஷ்வரி, செல்வி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

