ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, "சுற்றுலாவை மறுவடிவமைக்க டிஜிட்டல் செயல் திட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப் போட்டிகளில் ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மறவன்மடத்தில் உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். அவர்களுக்குக் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா. சீதாராமன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
தொடர்ந்து, "SWACHHTA PAKHWADA" என்னும் 'தூய்மையே சேவை' வாரத்தினை முன்னிட்டு, கோட்டை வளாகத்தில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து கட்டபொம்மன் கோட்டை வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கோட்டை வளாகத்தில் புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்நிகழ்வில் மனித வாழ்வில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன் சிறப்புரையாற்றினார். முன்னதாகத் தூத்துக்குடி மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் ந. சந்திரகுமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்றச் செயலாளர் சுப்பிரமணியன், கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் கலந்துகொண்டனர்.

